search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானியங்கி சிக்னல்"

    இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் காரைக்குடி 4 வழிச்சாலை பகுதியில் போலீசார் தானியங்கி சிக்னலை அமைத்துள்ளனர்.
    காரைக்குடி:

    ராமேசுவரத்தில் இருந்து காரைக்குடி வழியாக திருச்சி வரை தற்போது 4 வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் கட்டமாக திருமயம் முதல் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா வரை பணிகள் நிறைவு பெற்று மீதமுள்ள பணிகள் தற்போது முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. இதில் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர், மானகிரி, புதிய அரசு மருத்துவமனை, ஆவுடைப்பொய்கை, ஒ.சிறுவயல், வ.சூரக்குடி, நேமத்தான்பட்டி ஆகிய 7 பகுதிகள் காரைக்குடி வழியாக செல்லும் 4 வழிச்சாலையில் அமைந்துள்ளன.

    இதில் கோவிலூர் அணுகு சாலை பகுதியில் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது வரை 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்று 15-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளன. இந்த நிலையில் விபத்துகளை தடுப்பதற்காக கோவிலூர் அணுகு சாலை பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கோவிலூர் இணைப்பு பகுதியில் தனியார் ஜவுளிக்கடை பங்களிப்பில் ரூ.3 லட்சம் செலவில் 4 வழிச்சாலையின் 4 முனைகளிலும் தானியங்கி சிக்னல்கள் அமைத்துள்ளனர். இது தவிர விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பு கம்பிகள் (பேரிகார்டு) அமைத்தும், அதன் மூலம் மிதமான வேகத்தில் வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இது குறித்து காரைக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெத்தினம் கூறுகையில், தமிழகத்தில் முதன் முதலாக ஈரோடு பகுதியில் அரசு சார்பில் இது போல் 5 இடங்களில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக தென் தமிழகத்தில் காரைக்குடியில் தான் இந்த சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தானியங்கி சிக்னல் 24 மணி நேரமும் இயங்கும். இரவு நேரத்தில் இந்த சிக்னலில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் 4 வழிச்சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் முகத்தில் படும். இதன் மூலம் இந்த சாலையில் செல்லும் டிரைவர்கள் இந்த இடத்தில் தானாகவே வேகத்தை குறைத்து செல்வார்கள். இதன் மூலம் இந்த பகுதியில் வாகன விபத்துகளை தடுக்க முடியும்.

    இதேபோல் பகல் நேரத்தில் அதிக வெளிச்சத்தை தரும் இந்த சிக்னல் தூரத்தில் இருந்து வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு துல்லியமாக தெரியும். இதன் மூலமும் டிரைவர்கள் வேகத்தை குறைத்து செல்வார்கள். இது தவிர, சாலையின் நடுவே ஒளிரும் ஸ்டிக்கர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது காரைக்குடி அழகப்பர் சிலை மற்றும் ஸ்ரீராம்நகர் ரெயில்வே கேட் பகுதியிலும் இந்த சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் சார்பில் நிதி உதவி செய்தால் மேலும் உள்ள 5 இணைப்பு சாலைகளில் இந்த தானியங்கி சிக்னல் அமைக்கலாம். இதன் மூலம் இந்த பகுதியில் போக்குவரத்து விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×